திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் அபர்ணா (24). இவருக்கும் ஈரோடு மாவட்டம் சூளை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரசாந்த் (27) என்பவருக்கும் மேட்ரிமோணி மூலம் வரன் பார்த்து கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு தற்போது 1 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
திருமணத்திற்கு பிறகு பிரசாந்த் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரசாந்த் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததை அவரது செல்போனில் பதிவு செய்துள்ளாராம்.
இதனை அறிந்த அபர்ணா பிரசாந்த்திடம் கேட்டதற்கு அவரை அடித்து உதைத்து துன்புறுத்திய பிரசாந்த் திருச்சியில் உள்ள அபர்ணாவின் பெற்றோர் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு மாமனார் மாமியாரிடம் நீங்கள் மேலும் வரதட்சணை கொடுத்தால் தான் உங்கள் பெண்ணோடு
சேர்ந்து வாழ்வேன் என கூறி அவர்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார் பிரசாந்த்.
இதனால் மனவேதனை அடைந்த அபர்ணா நடவடிக்கை எடுக்க கோரி லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . இருப்பினும் போலீசார் குடும்ப பிரச்சினை தானே என புகாரை கிடப்பில் போட்டுவிட்டு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்துள்ளனர். இதனையடுத்து அபர்ணா திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டுள்ளார். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் மன வேதனைக்கு ஆளான அபர்ணா தனது பெற்றோருடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தியத்திற்கு சென்று புகாரை ஏற்று விசாரணை நடத்தும்படி அழுது புலம்பியுள்ளார்.
அவரை போலீசார் கண்டு கொள்ளவில்லை இதனால் ஆத்திரமடைந்த அபர்ணா அவரது 1 வயது பெண் குழந்தை மற்றும் பெற்றோர் ஆகியோர் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் கார்த்திகேயனியை கண்டித்து அனைத்து மகளிர் காவல்நிலையம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் காவல்நிலையத்திற்கு வந்து அபர்னா அவரது பெற்றோரிடம் விசாரணை செய்து, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததின் பேரில் தர்ணா போராட்டத்தினை அபர்ணா மற்றும் அவரது பெற்றோர் கைவிட்டு கைவிட்டனர்.