புரட்சிக்கலைஞர், கேப்டன் என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது உடலுக்கு நேற்று காலை முதல் மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இன்று மதியம் சரியாக 2.40 மணி வரை மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சந்தன பேழை அலங்கரிக்கப்பட்ட வாகனத்திற்கு எடுத்து வரப்பட்டது. அந்த பேழையில் புரட்சிக்கலைஞர், கேப்டன் விஜயகாந்த், நிறுவனத்தலைவர் தேமுதிக என எழுதப்பட்டு இருந்தது. அத்துடன் பிறந்த தேதி, மறைவு தேதியும் எழுதப்பட்டு இருந்தது. சரியாக 2.50 மணிக்கு விஜயகாந்த் உடலை சுமந்து கொண்டு வாகனம் புறப்பட்டது.
ஏறத்தாழ 33 மணி நேரம் மக்கள் அலை அலையாய் வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகும் பல்லாயிரகணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த காத்திருந்தனர். நேரத்தின் அவசியம் கருதி இறுதி ஊர்வலத்தை
தொடங்கினர். அந்த வாகனத்தின் முன்னும், பின்னும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் புறப்பட்டது. அந்த வாகனத்தில் பிரேமலதா, மகன்கள், இருந்தனர். முக்கிய நிர்வாகிகளும் வந்தனர்.
தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு அலுவலகம் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. வழிநெடுகிலும் மக்கள் வெள்ளமென திரண்டு உள்ளனர். எனவே வாகனம் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது. ஆங்காங்கே மக்கள் கேப்டன், கேப்டன் என கண்ணீருடன் கைகளை அசைத்து கதறிய காட்சியை காணமுடிந்தது.