நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த விஜயகாந்த் தேமுதிக எனும் கட்சியை தொடங்கி எம்.எல்.ஏ.வானார். அதன்பிறகு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை
பிடித்தார். திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று காலை சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது. மதியம் 1 மணி வரை அங்கு வைக்கப்படும் நடிகர் விஜயகாந்தின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் எடுத்து வரப்பட்டு இறுதி சடங்குகளோடு மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவைக் கடந்தும் மக்கள் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது. விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள், தே.மு.தி.க தொண்டர்கள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.