கொரோனா காலத்தில் கர்நாடக முதல்வராக இருந்த பாஜகவின் எடியூரப்பா 40 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டார் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. பகனாகவுடா பாட்டீல் யாத்னால் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விஜயபுரா தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இது தொடர்பாக விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, கொரோனா காலத்தில் எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?. கொரோனா தலைவிரித்தாடிய காலத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றது. பா.ஜனதா அரசு மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டது. இந்த குற்றச்சாட்டை நான் தெரிவிப்பதால் அவர்கள் நோட்டீஸ் அனுப்பி, என்னை கட்சியில் இருந்து நீக்க முயற்சித்தால், அவர்களின் மோசடியை வெளிப்படுத்துவேன். ஒவ்வொரு முகக்கவசம் 45 ரூபாய்தான். ஆனால், எடியூரப்பா அரசு 485 ரூபாய் என கணக்கு எழுதியது. பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 10 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்ததாக கூறினார்கள். அவை அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டது.
ஆனால் அவற்றை விலை கொடுத்து வாங்கினால் ஒரு நாள் வாடகைக்கான தொகையில் இரண்டு படுக்கைகள் வாங்கியிருக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார். சொந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே எடியூரப்பா மற்றும் கட்சி மீது ஊழல் மோசடி குறித்து வெளிப்படையாக குற்றம்சாட்டிய விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.