நேற்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து நிருபர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், நான் சில விஷயங்களை வெளிபடையாக கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறை சென்று விடுவார். கட்சிக்கு நான் உண்மையானாக இருந்ததன் காரணமாகவே ஜெயலலிதா என்னை மிகவும் நம்பி முதலமைச்சர் நாற்காலி வரையில் என்னை அமர வைத்தார். நான் அதிமுகவின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்துள்ளேன். அதிக ஆண்டுகள் அதிமுக பொருளாளராக நான் பொறுப்பேற்று இருந்திருந்தேன். ஒரு இக்கட்டான சமயத்தில் ஜெயலலிதா என்னிடம் இரண்டு கோடி ரூபாய் கடனாக கேட்டு வந்தார். கட்சி பணத்திலிருந்து நான் எடுத்துக் கொடுத்தேன். பிறகு ஒரே மாதத்தில் அதனை திருப்பிக் கொடுத்தார் என பல்வேறு தகவல்கள் ஓபிஎஸ் குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மீது இரண்டு மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவை விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்குகளில் நிச்சயமாக ஓபிஎஸ்-க்கு சிறை தண்டனை கிடைக்கும். அவர் குடும்பத்தினர் பெயரில் நிறைய சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளார். அதனை நான் முதல்வராக இருக்கும் போது அறிந்து கொண்டேன்.
என் மீது திமுகவின் செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கூட வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால், அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வாபஸ் பெற்றார்கள். ஆனால் நான் வாபஸ் பெற கூடாது என கூறி, நான் அந்த வழக்கை நடத்தி நான் நிரபராதி என்று நிரூபித்துக் காட்டினேன். தற்போது தான் ஒரு அமைச்சருக்கு (பொன்முடி) சிறை தண்டனை கிடைத்துள்ளது. அது போல் இன்னும் பல திமுக அமைச்சர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கும்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் பி-டீம் போல செயல்பட்டு வருகிறார்கள். அம்மாவுக்கு இரண்டு கோடி கடனாக கொடுத்தார் என்று ஓபிஎஸ் கூறுகிறார். இது எவ்வளவு மோசமான வார்த்தை. அம்மாவுக்கு (ஜெயலலிதா) இவர் கடன் கொடுத்தாராம். அவருக்கு முன்பிருந்தே நான் அதிமுகவில் இருக்கிறேன்.
நான் 1989இல் ஜெயலலிதாவின் அதிமுக அணி சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனேன். மீண்டும் 1991லும் எம்எல்ஏ ஆனேன். 1998இல் அதிமுகவின் எம்பி ஆனேன். ஆனால் ஓபிஎஸ் 2001இல் தான் எம்எல்ஏவாக ஆனார். அதுவரை அவருக்கு எந்த பதவியும் கிடையாது. 1989இல் ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிடுகையில், அவரை எதிர்த்து வெண்ணிற ஆடை நிர்மலா தேர்தலில் நின்றார். அப்போது வெணணிற ஆடை நிர்மலாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் ஓபிஎஸ்.
சேலம் மாவட்டத்தில் முதன் முதலாக அம்மா பேரவையை தொடங்கி அந்த காலத்தில் இருந்தே நாங்கள் கட்சியில் இருக்கிறோம். அவர் திமுகவின் பி-டீம் அப்படி தான் பேசுவார். அவருக்கு அப்படி என்னதான் தெரியும்.? என்ன ரகசியம் தெரியுமோ அதனை சொல்லுயா. அதிமுக 1974இல் தொடங்கியதில் இருந்து நாங்கள் கட்சிக்காக உழைத்து வருகிறோம். ஒபிஎஸ் பற்றி நாங்கள் சொல்ல வேண்டியது எல்லாவற்றையும் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் சொல்லியாச்சு என்று மிகவும் கடுமையாக ஓ.பன்னீர்செல்வம் குறித்து விமர்சனம் செய்திருந்தார் அதிமுக் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.