கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினமும் மெமோ பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது மேட்டுப்பாளையம் அருகே சேரன் நகர் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 13 ஆடுகள் மீது மெமோ ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 11 ஆடுகள் பரிதாபமாக உயிர் இழந்தன.
தண்டவாளத்திற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் தவறுதலாக தண்டவாளத்தின் மீது நின்றிருந்த போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் மூலமாக படுகாயமடைந்த 2 ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயில் தண்டவாளத்தின் அருகே ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என பல முறை ரயில்வேத்துறை அறிவுறுத்தியும், சிலர் இப்படி கண்காணிப்பின்றி ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கெனவே சுற்றுவட்டாரப் பகுதிகளில், சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது, 11 ஆடுகள் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.