கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீசார் இன்று காலை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, தேங்காய் நார் மூட்டைகளுக்கு இடையே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வேனில் இருந்த 700 கிலோ குட்கா புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவற்றை கடத்தியது தொடர்பாக வேனில் இருந்த 2 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ஓட்டுநர் ஏசுராஜ் மற்றும் தருமபுரியை சேர்ந்த உதவியாளர் செல்வம் என்பதும், அவர்கள் பெங்களுருவில் இருந்து சேலததிற்கு குட்காவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.