2019ம் ஆண்டு சீனாவில் உள்ள ஊகான் மாநிலத்தில் உருவான கோவிட் 19 என்ற கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் 2 அலைகளாக தாக்குதல் நடத்தி சுமார் 70 லட்சம் பேர் உயிரை குடிித்தது. சுமார் 70 கோடி பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பற்றிய எந்த அச்சமும் மக்களிடம் ஏற்படவில்லை. இப்போது திடீரென மீண்டும் உருமாறிய கொரோனா ஜேஎன்1 என்ற பெயரில் மீண்டும் பரவி வருகிறது.
இதுவும் சீனா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்பட பல நாடுகளில் பரலாக காணப்படுகிறது. இந்தியாவிலும் இந்த வகை கொரோனா இப்போது பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது ஜேஎன்.1 வகை கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இவ்வகை வைரஸால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தாலும் அது ஜேஎன்.1 வகை தானா என்பது ஒரு சில நாட்களுக்கு பிறகு தான் தெரியவரும். எனவே பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும் அது பற்றி உலக அளவில் அச்சப்படும் வகையில் எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜேஎன்.1 வகை கொரோனா தொற்று பரவி இருப்பது குறித்து இன்னும் சில நாட்களுக்குப் பிறகுதான் தெரியவரும். தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அச்சப்படும் வகையிலும், அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் எந்த பாதிப்பும் இல்லை . இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எக்ஸ் பி.பி.1 வகை வைரசுக்காக தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை ஜே.என்.1 வகை வைரஸ் பரவலை தடுப்பதற்கும் பயன்படுத்தலாம்’ என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது; இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது. புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.