அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். எம்.ஜி. ஆரின் மனைவியும், தமிழகத்தின் முதல் பெண் முதல்வருமான ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடுவது என அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. எடப்பாடி கொண்டு வந்த இந்த சிறப்பு தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 14 தீர்மானங்கள் திமுக அரசை கண்டித்து நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில் மத்திய அரசை வலியுறுத்தியும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசை கண்டித்து என்ற வாசகம் இல்லாத படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.