நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே குப்பச்சிபாளையம், குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர்கள் சண்முகம் (70), நல்லம்மாள்(65) தம்பதியினர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு கட்டிக் கொண்டு தனியாக வசித்து வந்தனர். கடந்த அக். 12ம் தேதியன்று இவர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ப.வேலுார் டி.எஸ்.பி-யான ராஜமுரளி, இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் வழக்குப் பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். அவர்களின் தொடர் விசாரணையில் தற்போது குற்றவாளி சிக்கி உள்ளார். தீயணைப்பு படையில் வேலை பார்க்கும் குப்பச்சிபாளையத்தை சேர்ந்த துரைசாமி மகன் ஜனார்த்தனன் (33) என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பதியை கொலை செய்த ஜனார்த்தனன், நாமக்கல் தீயணைப்பு படையில் வீரராக பணிபுரிகிறார். இவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், பலரிடமும் அதிக அளவில் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அதனால் தன் சொந்த ஊரில் தோட்டத்தில் தனியாக வசிக்கும் வயதான தம்பதி வீட்டில் கொள்ளையடிக்க, ஜனார்த்தனன் முடிவு செய்தார்.
அக்.11 இரவு 12 மணிக்கு, வயதான தம்பதியின் தோட்டத்துக்கு சென்ற ஜனார்த்தனன், அங்கிருந்த கடப்பாரையால் நல்லம்மாள், சண்முகம் ஆகியோரை தாக்கி கொடூரமாக கொலை செய்தார். பின், பீரோவில் இருந்த மிகவும் குறைவான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, மிளகாய் பொடியை தூவிவிட்டு, கத்தி, கடப்பாரையை அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு தப்பினார்.
விசாரணையில் ஏற்பட்ட சந்தேகத்தின்படி, ஜனார்த்தனனிடம் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்ததை உறுதி செய்து கைது செய்தோம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், குற்றவாளியை கைது செய்த போலீஸாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.