அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டமும், 2 முறை செயற்குழு கூட்டமும் நடத்த வேண்டும். அதன்படி, அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை காலை 10.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்று பேசினார். அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செம்மலை இரங்கல் தீர்மானம் வாசித்தார். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புயல் நிவாரண பணிகளை திமுக அரசு முறையாக செய்யவில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வெள்ளத்தால் பயிர்கள் மூழூகிய நிலையில் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
நாடாளுமன்ற பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்துவது.
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வரவேண்டும்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவருக்கான இருக்கை சட்டமன்றத்தில் ஒதுக்காமல் மரபுகளை மீறிய சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை தேர்தலில் அதிமுக 40 தொகுதியிலும் வெற்றி பெற களப்பணியாற்றுவது.
நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசுக்கு கண்டனம்.
ஆவின் பால் விலை உயர்வு, சொத்துவரி, மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வுக்கு கண்டனம்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கத் தவறிய சுகாதாரத்துறைக்கு கண்டனம்.
ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பொதுக்குழுவுக்கு வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் மேடைக்கு வந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.