2004 டிச.26-ம் தேதி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த தமிழக கடற்கரை கிராம மக்கள் இப்படி ஒரு துயரம் நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் காலையில் ஏற்பட்ட சுனாமியால் ராட்சத அலைகள்சீறி எழுந்தன. சென்னை, புதுச்சேரி,கடலூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பல ஆயிரம் பேர் கடல்அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் அன்றைய தினம் வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்த உற்சாகத்தின் ஒரு பகுதியில் காலையில் கடற்கரையில் திரண்டிருந்த பல்லாயிரகணக்கான மக்கள் ஆழிப்பேரலையால் வாரிசுருட்டி கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக இந்த சுனாமி ஏற்பட்டது. உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்ததாக அப்போது கூறப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பலியானார்கள். இதில் நாகை மாவட்டம் தான் அதிகமான மக்களை இழந்தது. நாகை, வேளாங்கண்ணி, பூம்புகார், பழையாறு, கொள்ளிடம் என பல இடங்களில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர். தஞ்சை மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, ராஜாக்கமங்கலம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களில் சுனாமியால் 1,017 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சுனாமி தாக்கி 19 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் அதனால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மாறவில்லை.
எனவே இன்று கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சொந்த பந்தங்களை இழந்தவர்கள் கடலுக்கு சென்று பால் ஊற்றி, மலர்கள் தூவி கண்ணீர் மல்க சுனாமி நினைவு தினத்தை அனுசரித்தனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில், இன்று சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் மொத்தஎண்ணிக்கை (அரசு கணக்கெடுப்பின்படி) 6,065 பேர். இதில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 4,231 பேர். மற்றவர்கள் பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவிடத்தில் நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கலெக்டர்ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் அரச அதிகாரிகள் மற்றும் சொந்த, பந்தங்களை இழந்தவர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதுபோல சென்னை, கடலூர், கன்னியாகுமரி , தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.