நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 44 தலித் மக்கள் நிலச்சுவான்தார்களால் ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வெண்மணி படுகொலை சம்பவத்தில் பலியானவர்களுக்கு வருடாவருடம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி 55 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கீழ்வெண்மணி கிராமத்தில் எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசை அமைந்திருந்த இடத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் அனுசரிக்கப்பட்டது.
செங்கொடியை ஏற்றிவைத்து வெண்மணி நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
கார்பரேட் முதலாளிகள் சொத்துகள் குவித்து வரும் நிலையில் உழைப்பாளிகள் இன்னும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள கார்பரேட் முதலாளிகளை எதிர்த்து எங்களது பயணம் தொடரும். சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கி வெறுப்பு அரசியலை, மதவெறி ஆட்சியை மோடி அரசு நடந்து வருகிறது. மோடி அரசை அப்புறப்படுத்த இந்தியா கூட்டணியோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. ஆனால் தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்ததால் உயிரிழப்பு இல்லை. 21 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக முதல்வர் நிவாரணம் கேட்டும் மோடி அரசு இதுவரையில் நிவாரணம் வழங்குவதற்கு ஒரு ரூபாய்கூட நிதி வழங்காமல் இருப்பது தமிழர்களை பழிவாங்கும் செயல்.டில்லியில் உட்கார்ந்துகொண்டு தமிழக அரசை குறை சொல்லும் வேலையை மட்டுமே நிர்மலா சீத்தாராமன் செய்து வருகிறார்.
2015 வெள்ள சேதம் இயற்கை இடர்பாடு அல்ல. முழுக்க முழுக்க மனித தவறுகளால் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் குறைகளை விமர்சிக்கும் பாஜக ,அதிமுகவினர் மத்திய அரசை பற்றி கேட்பது இல்லை . அதில் இருவரும் மௌனம் காக்கிறார்கள். அதிமுக இதில் மவுனம் காப்பது ஏன்.?
இவ்வாறு அவர் கூறினார்.