தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18ம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அருகில் உள்ள ஏரி, குளங்கள் உடைந்து பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. தாமிரபரணி கரையில் உள்ள ஏரல் நகரமும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது. ஏரல் மார்க்கெட் , அந்த பகுதி மக்களின் வர்த்தக மையம், காய்கறி, உணவு தானியங்கள் என அனைத்து பொருட்கள் வாங்க சுற்று வட்டார மக்கள் இங்கு தான் வருவார்கள்.
திடீரென ஏரலில் வெள்ளம் புகுந்ததால் மாா்க்கெட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட சிறு குறு கடைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து எந்த பொருளையும் மீட்க முடியாத அளவுக்கு சுனாமி போல வெள்ளம் திடீர் தாக்குதல் நடத்தியதால் வியாபாரிகள், பொதுமக்கள் உயிர் பிழைத்தால் போதும் என ஓட்டம் பிடித்தனர். இதனால் ஏரல்
மார்க்கெட்டில் உள்ள உணவு தானிய கடைகள், மளிகை பொருட்கள், ஜவுளிகள் என அனைத்து வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் வடிந்த நிலையில் இன்று கடைகளுக்கு வந்து வியாபாரிகள் பாா்வையிட்டனர்.
மார்க்கெட்டில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தண்ணீரில் ஊறிப்போய் இருந்ததால் இனி அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீரில் ஊறிப்போன அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணை, மற்றும் மளிகை பொருட்கள், சிறுதானியங்கள் அனைத்தையும் அள்ளி வியாபாரிகள் வெளியே கொட்டினர்.
தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சில வியாபாரிகள் தங்களுக்கு ரூ.25 லட்சம், 50 லட்சம் சேதம் ஆகிவிட்டது என கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.