திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (18). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு அருகே சக மாணவர்கள் நால்வருடன் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். நேற்று இரவு கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது நண்பர்களுடன் ஹேமச்சந்திரன் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பின்னர் வழக்கம் போல் தனது அறைக்கு தூங்க சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சாதாரணமாக விசாரித்து மெசேஜ் செய்துள்ளார். பின்பு தூங்க சென்று விட்டதாக தெரிகிறது. காலை 7 மணிக்கு சக மாணவர்கள் எழுந்து பார்த்தபோது மாணவர் ஹேமச்சந்திரன் அசைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதனையடுத்து ஹேமச்சந்திரனை பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் ஹேமச்சந்திரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதைதொடர்ந்து சக மாணவர்கள் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்து மாணவரின் பிரதேதத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார், கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மாணவருக்கு பரோட்டா உணவு சேராது என கூறப்படும் நிலையில, வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.