தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருமானூர் ஒன்றியம், கண்டிராதீர்த்தம் ஊராட்சி, கா.மேட்டுத்தெரு கிராமத்தில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடம் தங்கள் வீடுகளின் சுற்றுப்புறத்தில் மழைநீர் தேங்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர், உடைந்த பொருட்கள் மற்றும் தேங்காய் ஓடுகள் போன்ற கொசுப்புழு வளரும் காரணிகளை கண்டறிந்து அகற்றிட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கா.மேட்டுத்தெரு, கீழத்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை நேரில் பார்வையிட்டு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, வருகை புரிந்துள்ளவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்ததுடன் மாணவர்களிடம் அவர்களது பாடப் புத்தங்களில் உள்ள பாடங்களை வாசிக்க சொல்லியும் அவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர், திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு சிகிச்சை பெறுபவர்களின் விவரம், காய்ச்சல் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, காய்ச்சலின் தன்மை, நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊசி, மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம் மற்றும் அதன் காலாவதி நாள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் விவரம் குறித்தும்,
மேலும் மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு போதிய அளவில் இரும்புசத்து மாத்திரை, தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்;. மேலும் சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தந்து, சிகிச்சை மேற்கொள்கின்றனரா, பொதுமக்களுக்கு தேவையான உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய முடிவுகள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இதேபோன்று கிராம செவிலியர்கள் மூலம் கர்ப்பிணித்தாய்மார்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றனரா, அவர்களுக்கு தேவையான ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன், பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்கிடவும் சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அஜித்தா, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.