நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் EVM இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது EVM(Electronic Voting Machine) இயந்திரத்தில் வாக்குகள் பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது. அனைத்து வாக்காளர்களும் இந்த இயந்திரத்தில் அவர்களது வாக்குகளை செலுத்துகின்றனர். முன்பெல்லாம் ஓட்டு சீட்டுகளில், வாக்காளர்கள் அவர்களது வாக்குகளை செலுத்தி வந்த நிலையில் தற்போது இந்த இயந்திரத்தில் நவீன முறையில் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நவீன முறையில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாக சில அரசியல் கட்சியினர்கள் கூறுகின்றனர். அதேசமயம் பொதுமக்கள் முதியவர்கள் பலருக்கும் இந்த இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து பெரும்பாலும் தெரியாமல் உள்ளது. எனவே இது குறித்து அரசாங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் EVM இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது, அந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் விழிப்புணர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு
எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் EVM மாதிரி இயந்திரங்கள் வைக்கப்பட்டு அதற்கென ஒரு தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுமக்களுக்கு இந்த இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது, வாக்களித்ததை எவ்வாறு சரி பார்ப்பது என்பது குறித்து முழுமையாக எடுத்துரைக்கின்றனர். மேலும் பொது மக்களின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு மையங்களை நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் நாள் வரை செயல்படுத்த உள்ளதாகவும் இனிவரும் நாட்களில் கல்லூரிகளிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களிலும் அமைத்து புதிய வாக்காளர்களுக்கும் பொது மக்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியை பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.