புதுகை மாவட்டம் கட்டுமாவடி கடல் பகுதிகளில் சில தினங்களாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும், பெரிய வகை மீன்களும் மீனவர்கள் வலையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு மீனவர் வலையில் ராட்சத ஆமை சிக்கியது. இந்நிலையில் கட்டுமாவடியை சேர்ந்த மீனவர் விஜய் மற்றும் செம்பியன்மகாதேவிபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ரகு ஆகிய இருவரும் குறைவான ஆழத்தில் மீன் பிடிக்கப்படும் பட்டி வலையில் பகல் நேரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய வலையில் 10 அடி நீளமும், 5 கிலோ எடையும் கொண்ட ராட்சத பாம்பு சிக்கியது. இதனால் அதை வலையில் இருந்து எடுக்காமல் படகிலேயே வைத்தனர். அதிக வெப்பம் காரணமாக அந்த பாம்பு மயக்க நிலையிலேயே இருந்தது. பிறகு அந்தப் பாம்பை கடலிலேயே திரும்ப விட்டனர்.
இது குறித்து அதே ஊரைச் சேர்ந்த பரமசிவம் என்ற மீனவர் கூறியதாவது
இது ஒரு வகையான மீன் இனம் ஆகும். இது பார்ப்பதற்கு பாம்பு போன்று இருக்கும். இதை குழுவி மீன் என்று சொல்வார்கள். பெரும்பாலான குழுவி மீன்கள் சிறிய வகையாக இருக்கும். இந்த சிறிய வகை குழுவி மீன்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும். இதை மக்களும் வாங்குவார்கள். தற்போது வலையில் சிக்கிய இந்த பெரிய வகை குழுவி மீன் விசைப்படகு மீனவர் வலையில் மட்டுமே சிக்கும். ஆனால் இது பட்டி வலையில் தற்போது கிடைத்துள்ளது. இந்த குழுவி மீன் பெரியதாக இருந்ததால் பாம்பு என்று நினைத்து மீனவர்கள் கடலில் விட்டனர் . இந்தக் குழுவி மீன் பாம்பு போல் இருப்பதால் இது பாம்பு கிடையாது. கடலில் விஷத்தன்மை உள்ள பாம்புகளும், விஷத்தன்மையற்ற பாம்புகளும் இருக்கும். ஆனால் இந்த வகை பாம்பு மீன் விஷத்தன்மையற்றது. மனிதர்களை கடிக்காது. இதில் சிறிய வகை குழுவி மீன் மட்டுமே உணவாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.