சிங்கப்பூரில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோல் கேரளாவில் கடந்த 14-ம் தேதி ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் மாதிரியை பரிசோதனை செய்த போது அது ‘ஜே.என்.- 1’ என்ற உருமாறிய புதுவகை கொரோனா என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் ஓரிரு நபர்களுக்கு மட்டுமே தொற்று பதிவாகி இருந்த நிலையில் கிடுகிடுவென உயர்ந்து தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 2021ம் ஆண்டிலும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.