பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட மதரசா சாலை 14வது வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (21.12.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் விதம் குறித்தும், அவை உற்பத்தியாகாமல் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் வீடுவீடாக நகராட்சி களப்பணியாளர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
மதரசா சாலை பகுதியில் அமைந்துள்ள அனைத்து தெருக்களிலும் வீடு வீடாக சென்ற ஆட்சியர் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்கும் வகையில் போடப்பட்டிருந்த தேங்காய் சிரட்டைகள், டயர்கள், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ் கொசுக்கள் நல்ல நீரில்தான் உற்பத்தியாகும் எனவே மழைநீர் வீட்டைச்சுற்றி தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வீட்டின்
உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், டிரம்களை மூடிபோட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும், சுகாதாரத்துறை, நகராட்சி, ஊரகவளர்ச்சி முகமை களப்பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து, தங்கள் வீட்டை சுற்றுப்புறத்தை துாய்மையாக தண்ணீர் தேங்காத வகையில் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் ராமர், சமூகப்பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் சுகுனா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.