பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு, சமூக சேவைகள் மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம். இந்த மேற்கூறிய விசயங்களையே பெண்களுக்கு உற்ற தோழமை கொண்ட நகரங்களுக்கான காரணிகளாக ஐ.நா. அமைப்பு வரையறுத்து உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவதார் குரூப் என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ஐ.நா. அமைப்பு குறிப்பிட்ட காரணிகளுடன் கூடிய, பணி பாதுகாப்பு சூழல் கொண்ட, இந்தியாவில் பெண்களுக்கான முக்கிய நகரங்கள் என்ற பெயரில் தயாரான அறிக்கை முடிவுகள் கிடைக்கப்பெற்று உள்ளன். இதில், சமூகம் மற்றும் தொழிற்சாலைகள் அடிப்படையில் இந்த டாப் 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு புள்ளிகள் கொடுக்கப்படுகின்றன. இதன்படி, பணிபுரியும் இடங்களில் தொழிற்சாலைகள், வாழ்வதற்கேற்ற விசயங்கள் எளிமையான முறையில் கிடைக்க பெறுதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவை தென்னிந்திய நகரங்களில் உள்ளன என்பது பெண்களின் தேர்வாக உள்ளது.
இதில், பெண்களுக்கு பாதுகாப்பான பணி சூழல் உள்ள நகரங்களின் பட்டியலில் 78.41 புள்ளிகளுடன் சென்னை முதல் இடம் பிடித்து உள்ளது. இதனை தொடர்ந்து, புனே மற்றும் பெங்களூரு நகரங்கள் வருகின்றன. இதேபோன்று, 10 லட்சத்திற்கு கூடுதலான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டாப் 10-ல் தமிழகத்தின் 3 நகரங்கள் இடம் பிடித்து உள்ளன. 10 லட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டாப் 10 பட்டியலில் தமிழகத்தின் திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம் மற்றும் திருப்பூர் ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்து ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளன.
பெண்களுக்கான சிறந்த வாழ்க்கை குறியீடு கொண்ட வகையில், வடஇந்தியாவை விட தென்னிந்தியாவில் பணிபுரியவே பெண்கள் அதிக விருப்பம் தெரிவித்து உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏனெனில் இந்த பல நகரங்கள் தொழிற்சாலை மிகுந்த மையங்களாக உள்ளதுடன், அவற்றில் எண்ணிக்கையில் பெண்கள் பலர் பணிபுரிவதும் ஒரு காரணியாக காணப்படுகிறது. இதேபோன்று, மாநில சராசரியில் தென்னிந்தியாவை சேர்ந்த 3 மாநிலங்கள் டாப் 3-ல் இடம் பிடித்து உள்ளன. அவற்றில் கேரளா 55.67 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தமிழகம் மற்றும் கர்நாடகா முறையே 2 மற்றும் 3 ஆகிய இடங்களையும் பிடித்து உள்ளன. இவற்றை தொடர்ந்து மராட்டியம் (மேற்கு பகுதி) மற்றும் இமாசல பிரதேசம் (வடக்கு பகுதி) வருகின்றன. இந்த நகரங்களின் டாப் 10 பட்டியலில் தலைநகர் டெல்லி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது 41.36 புள்ளிகளுடன் 14-வது இடத்தில் உள்ளது.