கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறை கழிவுகள், நொய்யல் ஆற்றில் கலப்பதாக விவசாயிகள் அதிகாரியிடம் புகாா் தெரிவித்தும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் பயனில்லை. ஆனாலும், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீா் கலந்து நுரையுடன் வருவது தொடா்ந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. இதன் காரணமாக
நொய்யல் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்து வருகிறது. அதில் சாயக்கழிவு நீா் கலந்து பச்சை நிறத்தில் நிறம் மாறி உள்ளது. இந்த சாயக்கழிவு கலந்த தண்ணீா் கரூா் மாவட்டம் நொய்யல் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால், விவசாயமும், குடிநீா் ஆதாரமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஆகவே,நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீா் கலப்பதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனா்.