வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் பெருமழை பெய்தது. இதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இங்கு இன்னும் தண்ணீர் வடியாததால், படகில் சென்று மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களிலும் இந்த குழு ஆய்வு மேற்கொள்கிறது.
பாதிக்கபட்ட பகுதிகள் குறித்து மத்திய குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் காணொலி வாயிலாக காட்டி விளக்கமளித்து வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு பாதிக்கபட்ட பகுதிகளை ஒன்றிய குழுவினர் நேரில் பார்வையிடுகின்றனர்.