தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய 12 ஆயிரத்து 653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்றிரவு சந்தித்த பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். டில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 10.30 மணியளவில் சென்னை திரும்புகிறார். பின்னர், அவரது தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் 4 மாவட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் மதுரை செல்கிறார். நாளை (வியாழக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் சென்று அங்கு வெள்ள பாதிப்பு பகுதிகள், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார். மத்திய குழு வருகையை முன்னிட்டு முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.