வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதி இவ்வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் கோர்ட்டு தீர்ப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கருதி சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். தற்போது அவர் மதுரை ஐகோர்ட் சென்று விட்டார். எனவே அந்த வழக்கை நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்தார்.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, 64.90 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதால் அமைச்சர் பொன்முடியின் விடுதலையை ரத்துசெய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தண்டனை விவரங்களை வருகிற 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும். அன்றைய தினம் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி அகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பொன்முடிக்கு 2 வருடத்திற்கு மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்டால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழப்பதுடன், அமைச்சரவையில் இருந்தும் ராஜினாமா செய்ய நேரிடும்.