குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது…. நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்காக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தொடர்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளையும் கனமழை நீடிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாளையங்கோட்டையில் அதி கனமழை பெய்துள்ளது.