Skip to content
Home » மக்களுடன் முதல்வர் திட்டம்… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

மக்களுடன் முதல்வர் திட்டம்… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைபடுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வண்ணம் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், எஸ்.என்.ஆர் கல்லூரியில் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்றையதினம் துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு நபர்களுக்கு பட்டா ஆணைகளும், ஒரு நபருக்கு பிறப்பு சான்றிதழையும் வழங்கினார்.

மேலும் இத்திட்டமானது முதல்கட்டமாக அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளிலும், உடையார்பாளையம் பேரூராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 18.12.2023 இன்றும், 19.12.2023, 20.12.2023 மற்றும் 21.12.2023 ஆகிய நாட்களிலும், உடையார்பாளையம் பேரூராட்சியில் 18.12.2023 (இன்றும்) மற்றும் 19.12.2023 ஆகிய நாட்களிலும்,

வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 20.12.2023 மற்றும் 21.12.2023 ஆகிய நாட்களிலும் நடைபெறவுள்ளது. எனவே மேற்படி முகாம்களில் குறிப்பிடப்பட்டுள்ள வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். அதன் பின்னர் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக 2024 ஆம் ஆண்டு மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களும் 30 தினங்களுக்குள் சம்மந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

இம்முகாமில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், அரியலூர் நகர்மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பூங்கோதை, அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!