திருச்சி, பொன்மலையில் ரயில்வே மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் விளார் ரோடு காயிதே மில்லத் நகர் 2வது தெருவை சேர்ந்த ஹரிதாஸ் (66) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் . இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சையில் இருந்த ஹரிதாசை குடும்பத்தினர் யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மதியம் திடீரென மருத்துவமனை மாடியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்