சென்னை, வேளச்சேரியில் உள்ள டி.என்.எஸ்.பி காலனி, 4-வது அவென்யூவில், ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் மெல்வின் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் குப்பைகளை கொட்டி வந்தார். இதை கவனித்த மெல்வின் குப்பைகளை இங்கு கொட்டாதீர்கள் என சொல்லியபோது, வீட்டு உரிமையாளர் இங்குதான் குப்பைகளை கொட்டச் சொல்வதாக அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், 5 மணி நேரம் கழித்து அந்தப் பெண்ணின் மகன், அடியாட்கள் பலருடன் வந்து, மெல்வின் அங்கு இல்லாத நேரத்தில் அவரது மனைவியிடம் சென்று கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தரைத்தளத்தில் இருக்கும் மெல்வினின் நண்பரான செபஸ்டின் மில்டன், பெண்ணிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என தட்டிக்கேட்டார்.
ஆனாலும் அந்த கும்பல் கல்லால் தாக்கி கொலை வெறி ஆட்டம் ஆடியது. இந்த சம்பவம் குறித்து, வீடியோ ஆதாரங்களுடன் வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.