தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று, விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தஞ்சை க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, போலி ஆவணங்கள் மூலம் இலங்கைத் தமிழர்கள் 28 பேருக்கு பாஸ்போட் வழங்கப்பட்டது தெரியவந்தது. இந்த மோசடியில் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஆண்டிக்காடு கிராம அஞ்சலக ஊழியர்கோவிந்தராஜ்(64), கும்பகோணம் வடிவேல் (52), ராஜு(31), ராஜமடம் சங்கர்(42), சேதுபாவாசத்திரம் போலீஸ் ஸ்டேஷன் கம்பியூட்டர் ஆபரேட்டர் பாலசிங்கம் (36), திருச்சி மேலகல்கண்டார்கோட்டை வைத்தியநாதன் (52) ஆகிய 6 பேரை கடந்த 13-ம் தேதி போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியர் பக்ருதீன், திருச்சி உறையூரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்சுந்தர்ராஜ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற உடந்தையாக இருந்ததாகக் கூறி, சேதுபாவாசத்திரம் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் சேஷாவை(42) சஸ்பெண்ட் செய்தும், ஸ்பெஷல் பிராஞ்ச் ஏட்டு சச்சிதானந்தத்தை(40) பணியிலிருந்து விடுவித்தும் மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.