வைகை அணை என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டிக்கு அருகில் பாயும் வைகை ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணைக்கட்டு மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கு விவசாயத்துக்குத் தேவையான நீரையும் ஆண்டிப்பட்டி, மற்றும் மதுரை நகரங்களுக்குத் தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது. வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணை 111 அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71 அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும்.
இந்நிலையில் வைகையில் இருந்து ராமநாதபுரம் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. விநாடிக்கு 3,000 கன அடி வீதம் வைகை ஆற்றின் வழியாக ராமநாதபுரத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் டிச.19ஆம் தேதி வரை வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.