சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் வேளாண்மை மருத்துவம், குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், சமூக நலம், சித்த மருத்துவம், சத்துணவு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு ஆகிய துறைகளின் சார்பில் சிறுதானியம் தொடர்பான 16 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் கம்பு, சோளம், திணை, குதிரைவாலி, கேழ்வரகு, ராகி உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறு தானிய உணவுத் திருவிழாவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும் பல்வேறு உணவுகளை சுவைத்து பார்த்து அவற்றை பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்… 2023 ம் ஆண்டை ஐநா சபை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதன் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றார். தமிழ்நாட்டை பொருத்தவரை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல பேர் முன்னெடுத்து செய்கிறார்கள் எனவும் இந்தாண்டு முதல்வர் எடுத்த முயற்சி காரணமாக சிறுதானிய விழிப்புணர்வுகளில்
பல்வேறு தரப்பினர் பங்கெடுத்துள்ளனர் என தெரிவித்தார். சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முதல் நோக்கம் எனவும் நோய் வராமல் தடுக்க சிறுதானியங்களை முறையாக பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் எனவும் கூறிய அவர் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், உதவி செய்யவும் வேண்டும் என தெரிவித்தார். உண்மையில் சிறுதானியங்களை பயன்படுத்தினால் எல்லோருக்கும் நல்லது.
பள்ளி, கல்லூரிகளில் சிறுதானியங்கள் ஸ்டால் போடலாம் என ஆலோசனை வழங்கினார்கள் அதனை செய்வதாக ஆட்சியரும் உறுதியளித்துள்ளார் என்றார். கிராமங்களில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது எனவும் நகரத்தில் உள்ளவர்கள் திசை மாறி சென்றதால், நகரங்களில் விழிப்புணர்வுகளை செய்வது சரியாக இருக்கும் என்றார்.
கள் இறக்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “அது குறித்து கள ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அது குறித்து பின்னர் சொல்கிறோம்” எனத் தெரிவித்தார்.மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கொண்டிருக்கிறார்கள் எனவும், ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகள் நோய் பரவலை தடுப்பதில் கவனமாக இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். போலி மதுபானங்கள் டாஸ்மாக் கடையில் இருக்கவே இருக்காது என கூறுய அவர் வெளியில் போலி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறை எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். மேலும் போலி மதுபானங்களால் டாஸ்மாக் விற்பனை சரியவில்லை, எனவும் போலி மதுபான விற்பனையை ரெகுலராகவோ, தொழிலாகவோ செய்ய முடியாது எனவும் காவல் துறை நடவடிக்கை காரணமாக ஒவ்வொரு நாளும் இடத்தை மாற்றி தான் நடத்துகிறார்கள் என கூறினார். கோவைக்காக மாஸ்டர் பிளான் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது எனவும் விரைவில் மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.