இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2 தினங்களுக்கு முன் உள்ளே புகுந்த நபர்கள், அங்கு புகை குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் போலீசில் சரண் அடைந்தார். பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இவர்கள் உள்ளே நுழைந்து உள்ளனர். அதிர்ஷ்டவசமாக நாம் தப்பினோம். எனவே பாதுகாப்பில் உள்ள குளறுபடிக்கு யார் காரணம் என்பதை சபையில் உள்துறை அமைச்சர் அல்லது பிரதமர் விளக்க வேண்டும் என்று திமுக, காங், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங். உள்ளிட்ட கட்சி எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோதும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் சபையில் இல்லை. அதன் பிறகும் அவர்கள் சபைக்கு வரவில்லை. இதனால் 2 நாள் சபை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறாமல் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது. நேற்று திமுக எம்.பிக்கள் கனிமொழி, பார்த்திபன், காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, வெங்கடேசன்( கம்யூ) என 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடியது. ராஜேந்திர அகர்வால் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்கட்சி எம்.பிக்கள் பதாகைகளுடன் வந்து , எம்.பிக்கள் சஸ்பெண்டை கண்டித்து கோஷம் போட்டனர். இதனால் தற்காலிக சபாநாயகர் அகர்வால் சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.