கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கல்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (35) – ஜெயா (30) தம்பதியருக்கு 11 வயதில் மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரை காலி செய்துவிட்டு கரூர் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தில் புதிதாக வாடகை வீட்டில் குடியேறி உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய இரண்டாவது மகன் வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காத காரணத்தால், அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டு தாழ்வாரம் மற்றும் மின்விசிறியில் இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குழந்தைகளை தனியே தவிக்க விட்டு விட்டு தம்பதிகள் இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் பரவியதால், ஊர் பொதுமக்கள் சம்பவம் நடந்த வீட்டின் முன்பு குவிந்தனர்.
தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊரை விட்டு பஞ்சமாதேவி கிராமத்தில் குடியேறிய 10 நாட்களுக்குள் தம்பதியர் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.