முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் பொறியாளர் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். “தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது” என்றும், “இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்” என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரின் இந்த அடாவடித்தனத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாட்டு தலைவர்கள் பலர் கண்டித்து உள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரின் இந்த செயலை கண்டித்து உள்ளனர்.