இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இன்று மதியம் புகுந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோல நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ண புகைகளை வீசிய 2 பேரும் பிடிபட்டனர். 4 பேரிடமும் பயங்கரவாத தடுப்பு சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் கூறியதாவது:
நாடாளுமன்றம் புதிதாக கட்டப்பட்டுள்ளதால் தினந்தோறும் அதிகமான பார்வையாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். ஒரு எம்.பி. ஒரு நாளைக்கு 2 பேருக்கு தான் பாஸ் கொடுக்க முடியும். பஸ்களில் வரும் நூற்றுகணக்கானவர்களை சபாநாயகர் அனுமதி இன்றி எப்படி அனுமதிக்க முடியும்? பாதுகாப்பு குறைபாடு உள்ளதை இந்த சம்பவம் நமக்கு காட்டுகிறது.
2 பேர் திடீரென குதித்து ஓடிவந்தபோதே எம்.பிக்கள் பயந்து விட்டனர். சபை ஊழியர்கள் தான் அவர்களை பிடிக்க முயன்றனர். நாங்கள் வெளியே ஓடிவந்து போலீசாரை அழைத்தோம். 15 நிமிடத்திற்கு பின்னரே போலீசார் வந்தனர்’ என்றார்.