திருச்சி இ.பி. ரோட்டில் உள்ளது அரசினர் கூர் நோக்கம் இல்லம். சமூக பாதுகாப்புத்துறை மூலம் நடத்தப்படும் இந்த இல்லத்தின் கண்காணிப்பாளராக இருப்பவர் பிரபாகரன்(55). இந்த இல்லத்தில் தற்போது 13 சிறார்கள் உள்ளனர். இந்த இல்லத்தின் இரவு காவலராக பணியாற்றுபவர் பஷீர் அகமது.
கடந்த 9ம் தேதி இரவு மதுரைை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 4 சிறார்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர். எஸ்.ஐ. சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் அந்த சிறுவர்களை அழைத்து வந்திருந்தனர். அவர்களில் 2 சிறுவர்கள் ரத்த காயங்களுடன் இருந்தனர். அவர்கள் சிறுவர்களை ஒப்படைப்பதற்கான கடிதமும் கொண்டு வந்திருந்தனர். அந்த கடிதம் கூர் நோக்கு இல்ல கண்காணிப்பாளர் முகவரி இடப்பட்டிருந்தது.
அதிகாரியின் பெயருக்கு வந்த கடிதத்தை பிரிக்கலாமா, சிறுவர்களை உள்ளே அனுமதித்துக்கொள்ளலாமா என கேட்க அப்போது பணியில் இருந்த காவலர் பஷீர் அகமது, சூப்பிரெண்டு பிரபாகரனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். 3 முறை போன் அடித்தும் அவர் எடுக்கவில்லை.
எனவே உதவி சூப்பிரெண்டை, பஷீர் அகமது போனில் தொடர்பு கொண்டார். அதற்கு உதவி சூப்பிரெண்டு, பெரிய அதிகாரி இருக்கும்போது நான் எப்படி இதை முடிவு செய்ய முடியும்? நீ சூப்பிரெண்டிடமே பேசிக்கொள் என கூறி
விட்டார். இதற்குள் மதுரையில் இருந்து சிறார்களை அழைத்து வந்த எஸ்.ஐ., பஷீர் அகமதுவிடம் கடுமையான வார்த்தைகளால் சண்டை போட ஆரம்பித்தார்.
போதையில் இருக்கிறாயா? ஏன் தாமதம் செய்கிறாய் என அவர் சண்டை போட்டார். இந்த டென்ஷனில் பஷீர் அகமது மீண்டும் சூப்பிரெண்டு பிரபாகரனை போனில் தொடர்பு கொண்டார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பிரபாகரன், பஷீர் அகமதுவிடம் கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறார்.
அந்த உரையாடலின் சுருக்கம் வருமாறு:
பிரபாகரன்: நீ ஏன் தேவையில்லாம பேசுற
பஷீர்: உங்க பேர்ல கவர் போட்டு கொடுத்திருக்காங்க. உங்க பெர்மிஷன் இல்லாம நான் அதை ஓப்பன் செய்ய முடியாது. அதுதான் கேட்டேன். அதுவும் 2 பசங்க கைய கிழிச்சிட்டு வந்திருக்காங்க.
பிரபாகரன்: உன் வேல என்ன- வந்தவங்கள உள்ளே எடுக்க வேண்டியது தானே, இதுபற்றி ஏன் மற்றவங்களிடம் பேசுகிறாய்?
பஷீர்: நீங்க போன் எடுக்காததால, டிப்டி சூப்பிரெண்டிடம் கேட்டேன்.
பிரபாகரன்: வாரண்ட் இருந்தா எடுக்க வேண்டியது தான் உன் கடமை. நீ ஆரம்பத்தில் இருந்தே பிராட் பண்ற. நீ எடுக்க வேண்டாம், போன வைடா, நானே வாறேன். சரக்கு அடிச்சிருக்கியா, ஓவரா பேசுற,உனக்கு மெமோ கொடுக்கிறேன். திருட்டு பயலே..
பஷீர்: யார் சார் திருட்டு பய?
பிரபாகரன்: நீ தான் திருட்டு பய(இன்னும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துறார்)
இவ்வாறு வாக்குவாதம் நடந்தது. ஏற்கனவே இந்த சூப்பிரரெண்ட் பிரபாகரன் மீது பல புகார்கள் மேலிடத்துக்கு சென்று உள்ளது. காவலர்களை தூய்மைப்பணி செய்ய வற்புறுத்தியது தொடர்பாகவும் வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களை பார்க்க வரும் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் பேசி, அவர்களது நிதி நிலைக்கு ஏற்ப அவர்களிடம் கறந்து விடுவாராம். பண்டிகை வருது பையன்களுக்கு பிரியாணி போடணும், 5 கிலோ பிரியாணி அரிசி, எண்ணெய் , நெய் வாங்கி கொடுங்கன்னு ஒவ்வொரு பெற்றோரிடமும் வசூலித்து தன் வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவார் என கூர் நோக்கு இல்லத்தில் ஏற்கனவே இருந்த சிறார்களின் பெற்றோர் பலர் புகார் செய்து உள்ளனர்.
கூர் நோக்கு இல்ல சூப்பிரெண்டு அந்த இல்லத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்திற்குள் தான் இருக்க வேண்டும் என விதி இருந்தும் பிரபாரகன் தனது சொந்த ஊரான அரியலூரில் வசித்து வருகிறார். அதனால் அவர் அங்கிருந்து வருவதற்கு சிரமப்பட்டு ஊழியர்கள் மீது கடும் சொற்களால் எரிந்து விழுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.