வங்க கடலில் உருவான மிக்ஜம் புயல் கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருந்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடாமல் 24 மணி நேரம் மழை கொட்டியது. கடந்த 3ம் தேதி இரவும், 4ம் ேததி பகலில் கொட்டிய மழை காரணமாக மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஒரு நாள் விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், இழப்புகளை சீர் செய்யவும் ரூ.5060 கோடி நிவாரண நிதி உடனடியாக வழங்கும்படியும், மத்திய குழுவை அனுப்பி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும்படியும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து வெள்ளசேதத்தை பார்வையிட்டார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று மத்திய குழு நேற்று இரவு சென்னை வந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் மத்திய குழுவினர் இன்று காலை ஆலோசனை நடத்தினர். அப்போது வெள்ளசேதம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் குழுவினரிடம் காட்டப்பட்டு சேதம் குறித்து தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய், நிதித்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலை, காவல் உள்ளிட்ட துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை முடிந்த பிறகு மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து, ஒரு குழுவினர் வடசென்னை, மத்திய சென்னை, ஆவடி, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் தென்சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றனர். அவர்கள் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள், சேதம் அடைந்த சாலைகள், பயிர்கள் ஆகியவற்றை பாா்வையிடுகிறார்கள். கலெக்டர்கள், தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், உடன் சென்று சேத விவரங்களை விளக்கி கூறுகிறார்கள். இன்றும், நாளையும் வெள்ள பகுதிகளை பார்வையிடும் மத்தியக்குழுவினர் நாளை மறுநாள் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளை சந்திக்கிறார்கள். அப்போது தமிழக அரசின் சார்பில் முழு விளக்கம் அளித்து அறிக்கை அளிக்கப்படும். அதனைத்தொடர்ந்து டில்லி செல்லும் மத்தியக்குழுவினர் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.