ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் , 108 வைணவத்தலங்களில் முதன்மையானது. இங்கு ஆண்டுதோறும் விழாக்கள் நடந்து வந்தாலும், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பானது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது.
இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்ல, வௌி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், அல்லது சபரிமலை சென்று திரும்பும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்து ரெங்கநாதரை தரிசித்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று அதிகாலை ஆந்திர மாநில பக்தர்கள் 30 பேர் ஒரு பஸ்சில் கோயிலுக்கு வந்திருந்தனர். அப்போது கோயிலில் பணியில் இருந்த தனியார் செக்கியூரிட்டிகளுக்கும், ஆந்திர பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செக்கியூரிட்டிகள் ஐயப்ப பக்தர்கள் சென்னாராவ் உட்பட பலரை தாக்கினர். இதில் சென்னாராவ் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. செக்கியூரிட்டிகள் செல்வம், விக்னேஷ் , பரத் ஆகியோர் தங்களை தாக்கியதாக சென்னாராவ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தாக்குதலுக்கு ஆளான ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அடிபட்ட ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக இல்லாமல் தாக்குதல் நடத்திய கோவில் ஊழியர்களுக்கு துணைபுரிந்து தாக்குதலுக்கு உள்ளாகி காயம் பட்டவர்களை
கோயிலுக்கு வௌியே தள்ளிக்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்பட்ட பக்தர்கள் தங்களை தாக்கியர்கள் மீது கோயில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கொடுத்தும் போலீசார் புகாரை வாங்காமல் விரட்டி விடும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
செக்கியூாிட்டிகளின் அட்டகாசத்தை பார்த்துக்கொண்டிருந்த மற்ற பக்தர்கள் செக்யூரிட்டிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசியின் முதல் விழாவான திருநெடுந்தாண்டகம் இன்று தொடங்க உள்ள நிலையில், கோயிலில் அடிதடி, பக்தருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியதால் கோயில் பிரகாரம் போர்க்களம் போல ஆனது. கோயில் திருவிழா களைகட்டி இருந்த நேரத்தில் ரத்தக்களறி ஆனதால், கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகே மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பக்தர்களும், செக்கியூரிட்டிகளும் தனித்தனியாக ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.