Skip to content

தெலுங்கானாவை சுட்டிக்காட்டி திமுகவை விமர்சனம் செய்யும் விசிக…

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளனர். பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுகவில் சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு திமுக தரப்பில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில், நேற்று  “வழி காட்டும் தெலுங்கானா! தெலங்கானா துணை முதல்வர் காங்கிரஸ் மூத்த தலைவர் பட்டி விக்ரமர்கா மல்லு, தலித் சமூகத்தை சேர்ந்த மாலா பிரிவைச் சேர்ந்தவர். தற்போது அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தலித்களுக்கு ஒதுக்கப்படும் துறைகளை பார்த்தாலே சமூக நீதி பார்வை புலப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, தெலுங்கானா காங்கிரஸ் அரசை பாராட்டியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக திமுக நிர்வாகிகள் பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக திமுக அரசில் 3 அமைச்சர்கள் மட்டுமே தலித்கள். அவர்களுக்கும் முக்கிய துறைகள் வழங்கப்படாததை சுட்டிக்காட்டும் விதமாகவே வன்னி அரசு இப்படி பதிவிட்டுள்ளதாக கோபப்படும் திமுக நிர்வாகிகள் இது வேண்டாத வேலை என்கின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் விசிகவுக்கு 2 சீட்களை திமுக வழங்கியது. அதில் ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். கி.ரவிக்குமார், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *