சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து உள்ளனர். வடசென்னை பகுதியில் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் இருந்து எண்ணை கசிவும் வெள்ளத்தில் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வெள்ள பாதிப்புக்குள்ளான 4 மாவட்ட மக்களுக்கும் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வெள்ள நிவாரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. வெள்ள நிவாரண தொகை இந்த மாத இறுதிக்குள்ளாகவே வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் நிதித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வெள்ள பாதிப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு வெள்ள நிவாரண தொகையை எப்போது முடிவு செய்து அறிவிக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ. பி.எஸ். குடும்பத்துக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி விரைவில் இது தொடர்பாக அறிவிக்கை விடுவார். அவர் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பார். அதற்குள் ஒரு தொகையை அறிவித்து விடலாம் என முதல்வர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. மத்திய அரசு இதற்கு மேல் நிதி பெரிதாக தருவதாக தெரியவில்லை என்றே தெரிகிறது. எனவே தமிழக அரசின் நிதிநிலையை பொறுத்து, குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் இந்த மாதமே வழங்கலாம் என்று முதல்வர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.