தஞ்சையில் துணிகள் துவைக்க வாஷிங்மெஷினை இயக்கி விட்டு சென்ற நிலையில் அது வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த பேன் மற்றும் சில பொருட்கள் கருகின. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை கீழவாசல் கவாஸ்கார தெருவை சேர்ந்தவர் சிவகிரிநாதன். இவரது மனைவி புவனேஸ்வரி. இன்று காலை வழக்கம் போல் துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு துவைப்பதற்காக ஆன் செய்துவிட்டு புவனேஸ்வரி வெளியில் சென்று விட்டார். அப்போது வீட்டில் சிவகிரிநாதன் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் வாஷிங் மெஷின் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
வாஷிங் மிஷின் வெடித்த சத்தம் கேட்டு பதறிப்போன சிவகிரிநாதன் ஓடிவந்து பார்த்தபோது மிஷின் எரிந்து கொண்டு இருந்தது. உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. வாஷிங் மிஷின் வெடித்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும் வளைந்து போனது. எனவே திடீரென அதிக அழுத்தமுள்ள மின்சாரம் வந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.