Skip to content
Home » அதிமுக பொதுக்குழு….. எடப்பாடி புதிய திட்டம்…. மாஜிக்கள் அதிர்ச்சி

அதிமுக பொதுக்குழு….. எடப்பாடி புதிய திட்டம்…. மாஜிக்கள் அதிர்ச்சி

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும்  26-ந்தேதி  சென்னை  அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது.  2,665 பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு  பல வகையான சைவ, அசைவ உணவுகள்   வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்துவது அதிமுகவில் வழக்கமான நடைமுறைதான் என்றாலும், இந்த பொதுக்குழுவில் கட்சியின் எதிர்கால நலனை மையமாக வைத்து சில அதிரடி மாற்றங்கள்  செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

2 அல்லது 3  சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம்  நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ஏற்கனவே சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 72 மாவட்டங்களாக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரம் முன்னாள் அமைச்சர்களான மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களை பிரிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்பட சிலர் 4 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய மாவட்டத்துக்கு செயலாளர்களாக இருக்கிறார்கள். தொகுதிகளை குறைத்தால் தங்கள் வலிமை குறைந்து விடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். எனவே தங்கள் மாவட்டங்களை பிரிக்க கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால்  தேர்தல் நேரத்தில் இவர்கள் தங்கள்  தொகுதிக்குள்ளேயே அடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள். கூடுதலான தொகுதிகளை கைப்பற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. அதற்கு காரணம் மாவட்ட செயலாளர்களுக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையேயான மோதல்தான் என்று  எடப்பாடி கருதுகிறார்.

கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவே  இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார்கள். முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றவர்களை வளரவிடுவதில்லை .  முன்னாள் அமைச்சர்கள் பலர், திமுக அமைச்சர்களுடன்  இன்னும் தொடர்பில் உள்ளார்கள். பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்து நடத்துகிறார்கள். இப்படிப்போனால்  கட்சி எதிர்காலத்தில்  வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும் என்றும் தொண்டர்கள் எடப்பாடியிடம் குமுறி உள்ளனர் .

எனவே தொண்டர்களின்   கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில்  புதிய திட்டங்களை கொண்டு வர எடப்பாடி திட்டமிட்டு உள்ளாராம். இது பொதுக்குழுவில் பிரதிபலிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் முறையில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. தற்போது கட்சி முற்றிலும் தனது கட்டுப்பாட்டில் வந்து விட்டதால் பொதுச்செயலாளர் தேர்வில் சில திருத்தங்கள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் அறிவிப்பு  பிப்ரவரி அல்லது மார்ச்சில் வெளியாகும் என்பதால் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் இதில் விரிவாக  பேசப்படும் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள்.  அத்துடன்  மக்களவை தேர்தலை சந்திக்க   ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு பொறுப்புக்குழு நியமிப்பது தொடர்பாகவும் இதில்   முடிவு செய்யப்படும் என தெரிகிறது. அதிமுகவில்   ஓபிஎஸ் கோஷ்டியை  அதிரடியாக நீக்கி, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த எடப்பாடி, இந்த பொதுக்குழு மூலம் பல மாஜி அமைச்சர்களுக்கும், சென்னை மாவட்ட  நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார் என்றும் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!