வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். சென்னை மாநகரின் பல்வேறு இடங்களிலும் தேங்கிய மழை நீர் தானாக வடிந்துவிட்ட போதும், எர்ணாவூர், வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் இதுவரை வடியவில்லை. கழுத்தளவிற்கு மழை நீர் தேங்கியிருப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
பல இடங்களில் குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாலும், மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், தாங்களாகவே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனிடையே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு மற்றும் மழை வெள்ள சேதங்களை சீரமைக்க ரூ.5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததோடு, பிரதமர் மோடி உள்ளிட்டோரிடமும் வலியுறுத்தி இருந்தார்.