சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவருக்கும் தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பவருடன் அறிமுகமாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களிலும் அவர்கள் தகவல் பரிமாறி வந்துள்ளனர். நாளடைவில் அந்த சிறுமியும், சூர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் சிறுமி, கடைக்கு சென்றுவிட்டு வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு காதலன் சூர்யாவை சந்திக்க காரைக்குடி புதிய அரசு மருத்துவமனை அருகே சென்றுள்ளார்.
அங்கிருந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்ற காதலன் சூர்யா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்பு தனது நண்பர்கள் நான்கு பேரை வரவழைத்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரவு முழுவதும் வீட்டுக்கு செல்லாமல் இருந்த சிறுமி பயந்து போய் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். சிறுமியின் உறவினர் சிறுமியை காரைக்குடிக்கு அழைத்து வந்து விட்டுள்ளார்.
மகள் காணாமல் போன நிலையில், உறவினர் அழைத்து வந்து விட்டு சென்றது பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, தன்னை காதலன் சூர்யா ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, அங்கு கட்டாயப்படுத்தி மது குடிக்கச்செய்தார். பிறகு வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அத்துடன் விடாமல் தனது நண்பர் நிஷாந்தை வரவழைத்தார். அவரும், அவருடைய நண்பர்கள் 3 பேரும் அங்கு வந்தனர்.
அவர்களும் தன்னை பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டினர் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து காரைக்குடி மகளிர் போலீஸில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் சூர்யா, நிஷாந்த் உள்ளிட்ட 5 பேர் மீது சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து ஆத்திரம் அடைந்த சிலர், சூர்யா, நிஷாந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் பகுதிக்கு வரவழைத்தனர். அந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த தகவல் அறிந்ததும், மருத்துவமனைக்கு சென்ற போலீஸார், சூர்யா, நிஷாந்த் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வினோத்குமார் (20), வேலு (20) உள்பட மேலும் 3 பேரை தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவர்களையும் கைது செய்தனர்.