பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (06.12.2023) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் அனுப்பி வைத்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக தொடர்ந்து வரலாறு காணாத கனமழை பெய்தது. அதற்காக தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன் சீரமைப்பு பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவும் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தன்னார்வலர்கள் தனியார் அமைப்புகளின் மூலம் அரிசி, குடிநீர், மெழுகுவர்த்தி, போர்வைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு, சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மூன்று வண்டிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்னை மாவட்டம் புழுதிவாக்கம் பகுதிக்கு இன்று (06.12.2023) முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சி.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மஞ்சுளா, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சிவா, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.