எல்.ஜி பெருங்காயம் நிறுவனத்தை சேர்ந்த சதீஸ் வர்க்கர் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘எங்கள் நிறுவன தயாரிப்பு எல். ஜி பெருங்காயம் முத்திரைபதிவு சட்டத்தின் விதிகளின் படி நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் எங்கள் நிறுவனத்தின் பெயரை சிலர் முறைகேடாக பயன்படுத்தி போலியாக பெருங்காயம் தயாரித்து தமிழகம் மற்றும் ஆந்திராவில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த போலி பெருங்காயத்தை பயன்படுத்துவதால் மக்களின் உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில் சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் கொருக்குப்பேட்டை பகுதியில் 15 இடங்களில் பிரபல நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த இடங்களில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த வழக்கில் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் ( 49), ரவி (58), மணிகண்டன் (32), சதீஷ் (30), வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (72), ராமலிங்கம் (76), சுமதி (42), தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ஷாம்ஷத் இலாத் (32), கொடுங்கையூரை சேர்ந்த சீனிவாசன் (35), எம்.கே.பி.நகரை சேர்ந்த கனாராம் (48) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பெருங்காய தூள் மற்றும் கட்டிகள், அவற்றை தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருட்கள், அடைத்து விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த காலி டப்பாக்கள், பிரபல நிறுவனத்தின் முத்திரையை அச்சிட பயன்படுத்தப்பட்ட அச்சு எந்திரங்கள், உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:பெருங்காயம்