திருச்சி பொன்மலை முன்னாள் படைவீரர் காலனி 13வது தெருவை சேர்ந்தவர் அப்துல் கபார் (44) இவர் அதே பகுதியில் கறிக்கடை மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த வாரம் தனது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் அம்மாவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள், குளிர்சாதனப்பெட்டி ஆகியவற்றுக்கு தீவைத்தனர். மேலும் வீட்டின் மாடிக்கு சென்று தண்ணீர் டேங்க்கையும் உடைத்துவிட்டு, பின்பு மேலிருந்து கீழே இறங்கி பின்பக்க வழியாக போய் பின்பக்க தாழ்ப்பாளை உடைத்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்த முட்டைகளை எடுத்து கீழே போட்டு உடைத்து விட்டு தப்பிவிட்டனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஏதோ தீப்பிடித்து எரிகிறதை பார்த்து எழுந்தனர். வெளியே சென்று பார்த்த பொழுது மோட்டார் சைக்கிளும் குளிர்சாதனப்பெட்டியும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இது குறித்து அப்துல் கபார் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து வீடு புகுந்து மிரட்டும் வகையில் மோட்டார் சைக்கிள் மற்றும் குளிர்சாதன பெட்டியை எரித்து விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
சம்பவம் நடந்த பகுதியின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு பெய்த போது சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் பள்ளிவாசல் முன்னாள் மத குருவான அரியமங்கலம் முனியப்பன் தெருவை சேர்ந்த முகமது இப்ராகிம் சாதிக் (43) மற்றும் பொன்மலை கணேசபுரம் பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி முகமது இப்ராகிம் சாதிக்கை திருச்சி மத்திய சிறையிலும் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். முன்விரோதம் காரணமாக இப்ராகிம் சாதிக் இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.