மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை மாநகரப் பகுதிக்ளுக்கு உள்பட்ட 14 சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரி மற்றும் கடலோரப் பகுதிகளில் மழையளவு அதிகமாக காணப்படுகின்றது. இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வு நிபுணரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் எக்ஸ் தளத்தில், “இந்த மோசமான நிலைமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. புயல் சென்னைக் கடற்கரையை மேய்ந்துகொண்டிருக்கிறது. மேற்கு மேகங்கள் பிடிவாதமாக உள்ளதால் இன்று இரவு வரை கனமழை தொடரும்” எனப் பதிவிட்டுள்ளார்.