தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு `மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் `மிக்ஜம்’ புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய தமிழ்நாட்டில் சென்னை உள்பட வட கடலோரப் பகுதிகளில் நெருங்கி வரும் என்பதால் அங்கு கடும் மழை பெய்யும். தொடர்ந்து நாளை தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையையொட்டி நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும். அந்த நேரத்தில் மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை துவங்கி இன்று அதிகாலை வரை சென்னையில் சூறைக்காற்றுடன் மழை பெய்துவருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்படும் 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல்- மைசூர் சதாப்தி, சென்னை சென்ட்ரல்-கோவை விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி ரெயில், சென்னை சென்ட்ரல்-பெங்களூரு ஏ.சி டபுள் டக்கர் ரெயில், சென்னை சென்ட்ரல்-பெங்களூரு பிருந்தவன் ரெயில், சென்னை சென்ட்ரல்-திருப்பதி சப்தகிரி விரைவு ரெயில் ஆகிய 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.